
பிரிட்டனில் தற்போது ஏற்பட்டு வரும் சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் பலர் ஜலதோஷம் , இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குளிர்காலங்களில் உண்டாகக் கூடிய பலவிதமான நோய்களும் பரவத் தொடங்கியுள்ளதால் இருமலே அனைத்து நோய்களும் மோசமாவதற்கான முதல் அறிகுறி என்பதை புரிந்து கொண்டு மக்கள் மெத்தனமாக இல்லாமல் உடனடியாக பொதுநல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இருமல் தொடர்பான மருந்துகளை வாங்க வரும் மக்களை கண்காணித்து உடனடியாக அவர்களை மருத்துவரை அணுகச் சொல்லுமாறு நாடு முழுதும் உள்ள மருந்துக் கடைகளுக்கும் மருத்துவ சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் இருமல் இருந்தால் அது புற்றுநோயின் அறிகுறியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆரம்ப கால காட்டங்களிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயின் தீவிர பாதிப்பிலிருந்து தப்பலாம் எனவும் மருத்துவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறபப்ட்டுள்ளது.
தற்போது பிரிட்டனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணப்படுத்த முடியாத சூழ்நிலைக்குச் சென்றுள்ளதும் , ஆரம்ப கால கட்டங்களிலேயே இவர்கள் மருத்துவர்களை அணுகியிருந்தால் குணப்படுத்தியிருக்க முடியும் எனவும் நிபுணர்கள் மேலும் கூறியுள்ளனர்.