படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க!




இன்ப வாழ்வை விரும்பாதவர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன''அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம்கிடைக்க மாட்டேன் என்கிறதே!'' என்று சிலர்அல்ல அல்லபலர் கூக்குரலிடுவது கேட்கத்தானே செய்கிறதுஎன்ன காரணமாக இருக்க முடியும். ''பிரச்சனைதான்''

''பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை, பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை'' என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எதிலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம். அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம்.

ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி! திருமணம் முடித்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது மிகப்பெரியசாதனை தான்.
"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள் வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்''எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள்.
ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` என்பது பழமொழி.
தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதைக் காண்கிறோம்.இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.
இவ்விஷயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம்.
ஒரு கப் தேனீர் கூட கணவன் மனைவிக்கிடையிலுள்ள பிரச்சனைகளை சரி செய்துவிடும். ஆம்! தினசரி மனைவி கணவனுக்கு தேனீர் போட்டுக்கொடுக்கும் வழமைக்கு மாறாக சில தினங்கள் கணவன் அந்த காரியத்தை செய்யும்போது மனைவிக்கு உண்டாகும் சந்தோஷத்தில் அத்தனை பிரச்சனைகளும் கூட அடிபட்டுப்போகலாம்.

கணவன்-மனைவி இரு தரப்பினருள் எந்தத் தரப்பினரும், தான் அடுத்த தரப்பினரைவிட முக்கியத்துவத்தில், தரத்தில் குறைந்தவர் என எண்ணிவிடக் கூடாது. ஒவ்வொருவரது பணியும் பங்களிப்பும் அடுத்த தரப்பினருக்கு மிகவும் அவசியம். மனைவி தனது கணவனுடன், குடும்பத்துடன் சிறந்த முறையில் உறவாடு வதற்கான மிக முக்கியமான பண்புகளாவன அன்பு, இளகிய உள்ளம், பாசம், பரிவு, பணிவு, கணவனது பணிக்காக செலுத்தும் நன்றி என்பனவாகும்.
கணவனுக்காக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும், கணவனின் சொத்து, செல்வங்களை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வீண்விரயம் செய்யாதிருப்பதும் அவளது முக்கிய கடமைகளாகும். அவ்வாறே அல்லாஹுத்தஆலா அவளுக்கு அருளிய வற்றில் அவள் திருப்தியுறுவதும் அவளது பொறுப்பாகும். மிகக் கடுமையான சோதனைகள், கஷ்ட ங்களின்பொழுது கணவனுக்கு உதவி ஒத்துழைப்பதும், அவனது இரகசியங்களை மறைப்பதும், அவனுக்கு மிகச் சிறந்த, தூய்மையான முறையில் நன்றி உபகாரம் செய்வதும் அவளது முக்கிய கடமைகளுள் அடங்கும்.
அதேபோல் கணவனை மிகவும் கண்ணியப்படுத்துவதுடன் அவனை நல்ல முறையில் (வெளியில் சென்று திரும்பும் போது) வரவேற்பதும், மிக அழகான வார்த்தைககளை தேர்ந்தெடுத்து அவனோடு உறவாடு வதும், மனைவியின் கடமை. தன்னை தனது மனைவி புகழ்வதை பொதுவாக கணவன் விரும்புவான். அத்தகைய நல்ல புகழ்மாலைகளை-போலிகளின்றி-அவனுக்கு சூடுவதும் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வதும் அவன் விரும்புகின்ற அனைத்தையும் அறிந்து புரிந்து நடப்பதும் மனைவிக்குரிய தலையாய கடமையாகும்.
கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளை பெண்கள் தெரிந்து கொள்வது அவசியம். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள். இந்தக் காலத்தில் கணவனெல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய கதையை இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. பல இடங்களில் கணவன் மனைவி இருவமே வேலைக்குச் செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர்.

இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி கணவனுக்கு முன் வேலை முடிந்த வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால் வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்து மனமகிழ்ச்சி அடைவார். அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை பேசிக்கொண்டே அவரது ஷர்ட் பட்டன்களை கழற்றிவிடும் போது சொல்லவும் வேண்டுமா அவர்களது சந்தோத்தை!
அதேபோல் கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை தான்'' நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கலயா?என்று கூறாதீர்கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.
அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம் உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையே இருண்டு விடும். வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள். அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததம் "ஒரு கிழமையா உப்பு முடியப்போகுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே`என்று பொரிந்து தள்ளாதீர்கள்.
உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒழித்துக் கதைப்பதால் எப்போதாவது கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி உங்களுடன் இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப் பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள்.
கூடியவரை அவர்களை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாகப் பேசுங்கள். தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றிப்பேசாதீர்கள்.
மிக முக்கியமான விஷயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான ''தாம்பத்திய உறவு'' தான்.
அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும். அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும்.
அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ் விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள்.
நீங்கள் விரும்பாவிட்டாலும் அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் வேறு விஷயங்களுக்கு மறுப்பது வேறு; இவ்விஷயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து விடும்.
இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள்.  ஆகவே, உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் சிறக்கும்.
இல்லற வாழ்வு இனிக்க மனைவி கைகொள்ள வேண்டிய வழிமுறைகள், சாதனங்கள் போலவே, அதேபணியை சிறப்பாக்க கணவனுக்கும் பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அன்புகாட்டுவது, இரக்கமாக நடந்து கொள்வது, மனைவிக்கு முக்கியத்துவம் அளித்து தனது அன்பை அவளுக்கு வெளிப்படுத்துவதும், தனது அன்பை உணரச் செய்வதும், எப்பொழுதும் அவளைப் புகழ்வது, அவளோடு மென்மையாக நடந்து கொள்வது.
அவள் மீது பாசமழை பொழிவது, திறந்த மனதுடன் அவளுடன் பழகுவது, முடியுமான சந்தர்ப்பங்களில், முக்கியமான சந்தர்ப்பங்களிலெல்லாம் அவளுக்கு அன்பளிப்புக்களை வழங்குவது, அவளது சிறு தவறுகளை பெரிது படுத்தாதிருப்பது, அவளது கஷ்டமான அசௌகரியமான நேரங்களில் பொறுமையோடு அவளது பணிகளை சுமந்து கொள்வது, அவளது குடும்பத்தினரை கௌரவப்படுத்துவது, அவளது இரகசியத்தை பாதுகாப்பது, பிள்ளைகளில் கரிசனை காட்டி அவர்களை நல்ல முறையில் வளர்க்க உதவி புரிவது.
இப்படியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் நிச்சயம் இல்லறவாழ்வு இனிக்கும். உங்கள் வாழ்வில் கடைபிடித்துப் பாருங்கள். சந்தோஷம் பூத்துக்குலுங்கும்.  
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்  புகாரி ஹதீஸ் .56. 

posted by: M.A.Mohamed Ali
 .நன்றி
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க