படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மழை காலத்தில் ஏற்படும் சைனஸ் பிரச்சினை தீர்க்க வழிமுறைகள்: நவீன சிகிச்சைகள் விவரம்

பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்து வைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில் தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும்

மேலும் வளரும் பட்சத்தில் அது பல்லின் வேர் வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸ்லரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.


இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடும். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம்.அவர் மேலும் கூறியதாவது:- பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும் போது உஷாராக இல்லை என்றாலும் கஷ்டம் தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக்கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ்.இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டியது இருக்கும்.

ஆனால் சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால் தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை. டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். இதெல்லாம் சாதாரண காரியமில்லை. இப்போது இதற்குப் முற்றுப்புளளி வைக்கும் அளவுக்கு மருத்துவ துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடிகிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பது தான் இப்போதைய நிலை.

சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டி இருக்குமாப அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமாப அதற்கெல்லாம் அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் வாய்வழியாகக் கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாக கிழிக்க வேண்டி இருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாக தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும்.

கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

தொடர் தும்மல்:

ஒவ்வொமை, தூசு இவற்றால் தான் அதிகளவில் திடீரென்று தும்பல் ஏற்படுகிறது. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏ.சியை அடிக்கடி சுத்தப்படுத்தா விட்டாலும் கூட தும்மல் ஏற்படும். சுற்றுப்புற சூழல், சுகாதாரக்கேடு போன்ற வற்றால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு, தும்மல் என்பது நம் மூக்கின் அறைகளில் ஆக்கிரமிக்கும் சில தேவையற்றவைகளை வெளியேற்ற உடல் மேற் கொள்ளும் அனிச்சையான செயல் என்றும் கூட சொல்லலாம்.

சைனஸ் புற்று நோய்:

இந்த சைனஸை தோற்றுவிப்பதே ஜலதோஷம் தான். ஜலதோஷம் என்பது வைரஸ் கிருமிகளின் தாக்குதல். ஜல தோஷத்தால் உண்டாகும் தலைவலி காய்ச்சல், மூக்கடைப்பு போன்றவற்றை கட்டுப் படுத்தி விட்டாலே ஜலதோஷம் கட்டுப்பட்டு விடும். பொதுவாக ஜலதோஷம் மூன்று நாட்களிலிருந்து இரண்டு வாரத்திற்குள் குணமடைந்து விடும். இதை கடந்தும் குணமாகவில்லை என்றால் இது சைனஸ் பிரச்சனை என்ற முடிவுக்கு வரலாம். இதனை கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் கிருமிகள் கலந்து சளி சைனஸ் அறைகளில் தங்கி சீழாக மாறிவிடும். பின்னர் இதுவே சைனஸ் புற்றுநோயாகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. எனவே இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சர் என்ற சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை முறையில் தற்காலிகத் தீர்வே ஏற்பட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டு எண்டாஸ் கோப்பிக் என்ற சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு காயமோ தழும்போ ஏற்படாது. இம்முறை சிகிச்சை பெறுபவர்களுக்கு சைனஸ் தொல்லை மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்ற நிலை உருவானது. தற்போது அதைவிட நவீன சிகிச்சை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. `மைக்ரோ டிப்ரைடர்' என்ற கருவி மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் சைனஸை உருவாக்கும் பாலிப் சதை அகற்றப்படுகிறது.மூக்கு என்பது மிகவும் நுட்பமான சிக்கலான பகுதி என்பதால் மைக்ரோ டிப்ரைடர் கருவி மூலம் சிகிச்சை மேற் கொள்வது அவசியம் என்று கூறலாம்.

நவீன சிகிச்சை:

மூக்கின் அருகில் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கு அடைப்பு உண்டாவதே சைனஸ், மூக்கை இரண்டாகப் பிரிக்கும் விட்டம் நடுவில் இல்லாமல் வளைந்து இருந்தால் சைனஸ் அறைகளில் சளி தேங்கும். சளியில் வளரும் பாக்டீரியா காரணமாக சீழ் உண்டாகி தலைவலி, காய்ச்சல், முக வீக்கம், தொண்டை வீக்கம், காது வலி, காது அடைப்பு உண்டாகும். இதனால் மூக்கில் இருந்து ரத்தத்து டன் சீழ் வடியும் நிலையும் ஏற்படும். இதற்கு கே.டி.பி. 532 லேசர் கருவி மூலம் எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை அல்லது செப்டோபிளாஸ்டி சிகிச்சை பெறலாம். தழும்போ, காயமோ ஏற்படாது. சைனஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையின்றி `பலூன் சைனு பிளாஸ்ட்டி' என்ற அதிநவீன சிகிச்சை முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக எண்டோஸ்கோப்பி மூலம் சைனஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதைக் காட்டிலும் `பலூன் சைனு பிளாஸ்ட்டி' முறை எளிதானது, பாதுகாப்பானது. இந்த வகை சிகிச்சையில் கதீட்டர் குழாய் மூலம் சைனஸ் காற்று அறைகளில் துளைகளை ஏற்படுத்தி, பலூனைச் செலுத்தி காற்று செல்வதற்கு உள்ள நோய்த் தொற்று தடைகள் அகற்ற முடியும். 4 மணி நேரத்தில் சிகிச்சை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம்.

அலர்ஜி:

அலர்ஜி காரணமாக ஏற்படுவது சைனஸ் பிரச்சினை. பொதுவாக மூக்கின் பக்கவாட்டில் சைனஸ் கேவிட்டி எனும் உள் உறுப்பு இருக்கிறது. இதில் காற்று நிரம்பி இருக்கும். இதுதான் மண்டை ஓட்டின் எடையைக் குறைவாக வைத்திருக்க உதவும். இந்த கேவிட்டியினுள் தூசியோ, கிருமி தொற்றோ, நீர் கோர்த்தாலோ இருந்தால்... உடனே சளி பிடிப்பதுடன், தலைவலி, மூக்கடைப்பு ஏற்படும். மூக்கினுள் சதை அதிகமாக வளர்ந்திருந்தாலும் மூக்குத் தண்டு வளைந்திருந்தாலும், குழந்தை மற்றும் நடுத்தர வயதினருக்கு மூக்கின் பின்பக்க சதை வளர்ந்திருந்தாலும் சைனஸ் கேவிட்டினுள் கிருமி தொற்று ஏற்பட்டு, சைனஸ் சிக்கல் உண்டாகும். எனவே மூக்கில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

பாதுகாப்பது எப்படி?

மூக்கை பொறுத்தவரை தண்ணீரை மாற்றி அருந்தினாலோ, குளித்தாலோ ஏற்படும் மூக்கடைப்பை கவனித்துக் கொள்ள வேண்டும். மழையில் நனைந்தாலோ அல்லது பனியில் நனைந்தாலோ முதலில் பாதிக்கப்படுவது மூக்கு தான். அதனால் பருவநிலைக்கு ஏற்ப மூக்கை கவனித்துக் கொள்ள வேண்டும். மூக்குப்பொடி போடுவது முற்றிலும் தவிர்க்கபட வேண்டும். குளிர்பானங்களை பருவக்கூடாது. அதே போல் மிகவும் குளிர்ந்த திரவங் களையும் உட் கொள்ளக்கூடாது. காது,மூக்கு, தொண்டை போன்ற நுட்பமான பகுதியில் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது. மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து பிராணாயாமம் என்கின்ற மூச்சு பயிற்சியும், மற்றும் சில தேவையான உடற்பயிற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும்.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க